இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மெய்நிகர் நாணயங்களுக்கு வளர்ந்துவரும் ஆர்வம் பற்றி விழிப்பாக இருக்கின்றது.
'மெய்நிகர் நாணயங்கள்" என்ற சொற்பதமானது தனிப்பட்டரீதியாக விருத்திசெய்பவர்களினால் வெளியிடப்படுகின்ற அவர்களின் சொந்தக் கணக்கின் அலகுகளில் மாற்றம் செய்யப்படுகின்ற டிஜிடல் ரீதியாக உருவாக்கப்பட்ட பெறுமதி வகைக் குறிப்பீடுகளை குறிப்பிடுவதற்குப் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. மெய்நிகர் நாணயங்களின் பொதுவான உதாரணங்கள், எண்ம நாணயம் (Bitcoin), மென் நாணயம் (Litecoin) மற்றும் ஈத்தரம் (Ethereum) போன்ற மறைகுறி நாணயங்களாகும் (Crytocurrenceis). மெய்நிகர் நாணயங்கள் மத்திய வாங்கியினால் வெளியிடப்படும் நாணயங்களல்ல.
மறைகுறி நாணயங்கள் போன்ற மெய்நிகர் நாணயங்கள் கொடுக்கல்வாங்கல்களை அங்கீகரிப்பதற்கு பரவலாக்கப்பட்ட ஒன்றுக்கொன்று ஒப்பான டிஜிட்டல் வலையமைப்புகளை பயன்படுத்துகின்றது. நாணயத்தின் பெறுமதிக்கு உத்தரவாதமளிப்பதற்கு மற்றும் கொடுக்கல்வாங்கல்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி போன்ற மையப்படுத்தப்பட்ட அதிகார நிறுவனமொன்றின்மையின் காரணமாக எவரேனும் பயன்பாட்டாளர் அல்லது கொடுக்கல்வாங்கல் தொடர்புபட்ட பிரச்சினைகள் அல்லது பிணக்குகள் நிகழுகின்ற சந்தர்ப்பத்தில் உதவிகளை நாட முடியாது. மெய்நிகர் நாணயங்களின் பெறுமதி ஊக வணிகத்தின் மீது தங்கியிருப்பதுடன் அடிப்படைச் சொத்தொன்றினால் அல்லது ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பொன்றினால் உத்தரவாதமளிக்கப்படவில்லை. இதன் காரணமாக மெய்நிகர் நாணயங்கள் பாரிய தளம்பல்களை எடுத்துக்காட்டலாம். அதேபோன்று, மெய்நிகர் நாணயங்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றபோது உயர் இலாபத்தன்மை இருப்பதாக தோன்றக் கூடியது. மேலும், நோக்கத்துடன் இல்லாதபோதிலும் அவற்றின் பயன்பாடு பணம் தூயதாக்கலுக்கெதிராக மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் சட்டங்களை மீறுவதை ஒத்ததாகவிருக்கக் கூடியது. எனவே, தற்போதைய வடிவங்களிலுள்ள மறைகுறி நாணயங்கள் அவற்றைப் பயன்படுத்துவோர்களுக்கும் அதேபோன்று பொருளாதாரத்திற்கும் நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட ரீதியான மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு அத்துடன் பாதுகாப்புடன் தொடர்புபட்ட இடர்நேர்வுகள் என்ற நியதிகளில் குறிப்பிடத்தக்க இடர் நேர்வுகளைத் தோற்றுவிக்கலாம்.
மறைகுறியீட்டு நாணயங்கள் உள்ளடங்கலாக, மெய்நிகர் நாணயங்களை ஈடுபடுத்துகின்ற திட்டங்களை தொழிற்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி ஏதேனும் குழுமத்திற்கோ அல்லது கம்பனிக்கோ உரிமத்தையோ அல்லது அதிகாரத்தினையோ அளிக்கவில்லையென்பதனையும் அத்துடன், ஏதேனும் ஆரம்ப நாணய வழங்கலுக்கு அதிகாரமளிக்கவில்லையென்பதனையும் பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கின்றது.