இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றினை தொடக்கி வைத்ததுடன் நிதியியல் நிறுவனங்களின் மூத்த அலுவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான உயர்மட்ட ஆய்வரங்கு ஒன்றினையும் இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் 2019 யூன் 19 அன்று தொடக்கி வைத்தது. இது, ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி இலுள்ள பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் உலகளாவிய வலையமைப்புக் கூட்டத்தில் 2019 ஏப்பிறல் 10ஆம் நாளன்று நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றிற்கான தேசிய வெளியீட்டுடன் தொடர்புபட்டதாகும்.
இவ்வழிகாட்டலானது, வரையறுக்கப்பட்ட (உத்தரவாதப்படுத்தப்பட்ட) இலங்கை வங்கியாளர் சங்கம், இலங்கை நிதியகங்கள் சங்கம், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு என்பவற்றை உள்ளடக்கிய ஆர்வலர்கள் தரப்பினரின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் செயலகமாகவும் தொழில்நுட்ப மதியுரையாளராகவும் பணியாற்றியதுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் அதன் உயிரின பல்லினத்தன்மை நிதி முன்னெடுப்புக்களினூடாக மத்திய வங்கி நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதி வழிகாட்டலை வடிவமைப்பதற்கான நிதியியல் உதவியையும் வழங்கியது.
இவ்வழிகாட்டலானது, நிதியியல் ஒழுங்குமுறைப்படுத்துநர்களுக்கும் நிதியியல் நிறுவனங்களுக்கும் சூழலையும் சமூகங்களையும் காத்திரமான முறையில் முகாமைப்படுத்துவதற்கும் அவர்களின் நிதியியல் செயற்றிட்டங்களுடன் இணைந்த இடர்நேர்வுகளை ஆளுகை செய்வதற்கும் பசுமையான, காலநிலை - சிநேகபூர்வத்தன்மை கொண்ட மற்றும் சமூகரீதியான வசதிகளைக் கொண்ட வியாபாரங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கும் பரந்தளவிலான பணிப்புரைகளை வழங்குகின்றது. இது, வங்கித்தொழில் மற்றும் மூலதனச் சந்தைகள் மற்றும் காப்புறுத்தொழில் துறை என்பனவற்றை உள்ளடக்கிய நிதியியல் துறையின் பங்களிப்புக்களின் அளவை அதிகரிப்பதற்கும் கூடியளவு தாக்குப்பிடிக்கக்கூடிய, நீடித்துநிலைத்திருக்கக்கூடிய பசுமைப் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் விதத்தில் உதவுவதற்கும் முயற்சிக்கின்றது. இவ் வழிகாட்டலானது, இலங்கையில் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதியினை நடைமுறைப்படுத்துவதற்கான உபாய நடவடிக்கைத் தொடர்களை விளக்குகின்ற அதேவேளை, இது தொடர்பான அக்கறையுடைய தரப்பினரால் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடவடிக்கைத் திட்டத்தினையும் விபரமாகத் தருகிறது.
இலங்கை மத்திய வங்கியானது, இலங்கையில் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வழிகாட்டலில் குறித்துரைக்கப்பட்டுள்ள தந்திரோபாய நடவடிக்கைகளுக்கு சிறப்பான நடைமுறைப்படுத்தலினை வசதிப்படுத்துவதற்காக வழிகாட்டல் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது ஆர்வலர்களை அவர்களுடைய வழமையான வியாபார காலத்தில் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதியிடலை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் வேளையில் முன்னேற்றத்தினைக் கண்காணிக்கவும் மீளாய்வு செய்யவும் எதிர்பார்க்கிறது. இலங்கையில் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதித்துறையின் இயலளவினை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையினை அங்கீகரிக்கின்ற விதத்தில், மத்திய வங்கியானது அதனுடைய பயிற்சி நெறி அலகான வங்கிதொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்தினூடாக நீடித்துநிலைத்திருக்கும் நிதியியல் தொடர்பில் ஆர்வலர்களுக்கான தொடர்ச்சியான பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தினை வடிவமைத்திருக்கிறது. அவ்வகையிலான இயலளவினை கட்டியெழுப்பும் முன் முயற்சிகளில் முதலாவது, பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றின் ஒத்துழைப்புடன் 2019 யூன் 20 - 21 களில் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்தில் நடாத்தப்படவுள்ளது.