2017இல் இலங்கை சுபீட்சச் சுட்டெண் 2016இல் பதிவுசெய்யப்பட்ட 0.661 இலிருந்து 0.771 இற்கு அதிகரித்தமைக்கு “பொருளாதாரம் மற்றும் வியாபாரச் சூழல்” மற்றும் “சமூக பொருளாதார உட்கட்டமைப்பு” ஆகிய துணைச் சுட்டெண்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களே முக்கிய காரணங்களாகும். பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண் 2017ஆம் ஆண்டுப்பகுதியில் மேம்பட்டமைக்கு தலைக்குரிய மொ.உ.உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பும் தொழில் வாய்ப்புடன் இணைந்து காணப்பட்ட அம்சங்களில் ஏற்பட்ட அதிகரிப்புக்களும் காரணங்களாக அமைந்தன. சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணினைப் பொறுத்தவரையில் விரைவுப் பாதையின் விரிவாக்கத்தின் காரணமாக வீதிவலையமைப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், பாலங்கள் மற்றும் மேம்பாலச் செயற்றிட்டங்களின் கட்டுமானம், மின்னூட்டல் வசதிகளின் கிடைப்பனவு மற்றும் குழாய்வழி நீரின் தரத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் என்பன முக்கிய தூண்டுதல்களாக அமைந்தன. சூழலின் தூய்மை மற்றும் காற்றின் தரம் என்பனவற்றின் மட்டம் குறைவடைந்தமையின் காரணமாக 2017ஆம் ஆண்டுப்பகுதியில் மக்கள் நலனோம்புகை துணைச் சுட்டெண் வீழ்ச்சியடைந்த போதும் நலக் கவனிப்பு வசதிகளின் கிடைப்பனவு, தரமான கல்வியின் கிடைப்பனவு, மக்களின் செல்வம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் அவர்களின்; ஈடுபாடு போன்ற அம்சங்களில் முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.