இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் பொருளாதார சமுகப் புள்ளிவிபரங்கள் - 2018 என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.
இவ்வெளியீடானது, தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி, அரசநிதி, வங்கித்தொழில் மற்றும் நிதியியல் நிறுவனங்கள், பணம் மற்றும் மூலதனச் சந்தைகள், விலைகள் மற்றும் கூலிகள், குடித்தொகை மற்றும் தொழிற்படை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொலைத் தொடர்பூட்டல் பணிகள், காலநிலை ஆகிய துறைகளிலுள்ள இலங்கையின் பொருளாதார, சமூகக் குறிகாட்டிகளையும் ஏனைய நாடுகளிலுள்ள பொருளாதார, சமூகக் குறிகாட்டிகள் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும், தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட வீட்டலகுகள் வருமானம் மற்றும் செலவின அளவீட்டிலிருந்து பெறப்பட்ட இலங்கையின் வாழ்க்கை நிலைமைகள், வறுமை மற்றும் வீட்டலகுகளின் பண்புகள் மீதான தகவல்களும் இவ்வெளியீட்டில் கிடைக்கப்பெறுகின்றது. மேலும், இது முக்கிய பொருளாதார மாறிலிகள் தொடர்பாக மாகாண மட்டத்தில் பகுக்கப்பட்ட தரவுகளையும் உள்ளடக்குகிறது. தொழில்முயற்சியாளர், கொள்கைவகுப்போர், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போன்ற பயன்பாட்டாளர்களின் பல்லினத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் விதத்தில் இவ்வெளியீட்டிலுள்ள புள்ளிவிபரங்கள் காலத்தொடர்/ குறுக்குப் பிரிவு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இவ்வெளியீட்டினை சென்றல் பொயின்ற் கட்டடத்தில் அமைந்துள்ள மத்திய வங்கியின் விற்பனை மற்றும் விநியோகக் கரும பீடத்திலும் (சதாம் வீதி, கொழும்பு 01) வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்திலும் (58, சிறி ஜெயவர்த்தனபுர மாவத்தை, இராஜகிரிய) மற்றும் மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களிலும் (கிளிநொச்சி, திருகோணமலை, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, மற்றும் அநுராதபுரம்) கொள்வனவு செய்யமுடியும். அத்துடன் இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை மத்திய வங்கியின் வெப்தளத்தின் (http://www.cbsl.gov.lk) ஊடாக அணுகலாம்.