இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம்
பொதுநோக்கு
வைப்புக் காப்புறுதி என்பது நிதி நிறுவனங்கள் முறிவடைவதன் காரணமாக வைப்பாளர்களுக்கு ஏற்படும் இழப்புக்களிலிருந்து நிதியியல் நிறுவனங்களின் வைப்பாளர்களை முழுமையாக அல்லது பகுதியாக பாதுகாப்பதற்கு பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பொறிமுறையொன்றாகும்.
அதற்கமைய, வைப்புக் காப்புறுதியானது பாதுகாப்பு வலைப் பொறிமுறையொன்றாக செயற்படுவதுடன் 2007-2008 இன் உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் அதன் முக்கியத்துவம் போதுமானளவில் எடுத்துக்காட்டப்பட்டது. இற்றைவரை வைப்புக் காப்புறுதியானது இலங்கை, கனடா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், யப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, தென்கொரியா, ஐக்கிய இராச்சியம் போன்றன உள்ளடங்கலாக 100இற்கு மேற்பட்ட நாடுகளில் தாபிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் வரலாறு
• | 2010ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் 2010.10.01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமாக 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் இயலச்செய்கின்ற ஏற்பாடுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கி கட்டாய வைப்புக் காப்புறுதித் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தியது. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் பெயர் 2013ஆம் ஆண்டின் தொடர்ந்துவந்த திருத்தங்களின் அடிப்படையில் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டம் எனத் திருத்தம் செய்யப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த நிதியியல் முறைமை உறுதிப்பாட்டின் நலனுக்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் நிதியியல் நிறுவனங்கள் முறிவடைவதிலிருந்து வைப்பாளர்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையொன்றாகவும் இதனூடாக வைப்பாளர்களின் நம்பிக்கையினைப் பேணுவதன் மூலம் நிதியியல் நிறுவனங்களின் உறுதிப்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றது. |
• | 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் இயற்றப்பட்டதுடன் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம் சட்ட ரீதியான நிறுவப்பட்டு இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமெனப் பெயரிடப்பட்டது. |
இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தை தாபித்தலின் பிரதான நோக்கம்
• | இலங்கை மத்திய வங்கியினால் அத்தகைய உறுப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமம் இரத்துச்செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தில் காலத்திற்குக் காலம் இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான உயர்ந்தபட்சத் தொகை வரை அத்தகைய வைப்பாளர்களுக்கு ஈடளிக்கும் பொருட்டு திட்டத்தின் உறுப்பினர் ஒருவரான நிதியியல் நிறுவனமொன்றின் (“உறுப்பு நிறுவனம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) வைப்பாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட வைப்புக்களுக்கு காப்பீடு அளித்தல்; |
• | பாதுகாப்புகளுக்குட்பட்டு தீர்மான வழிமுறையொன்றாக உறுப்பு நிறுவனமொன்றின் சொத்துக்களின் மற்றும் பொறுப்புக்களின் கைமாற்றலை வசதிப்படுத்துவதற்கு பொருத்தமான நிதியியல் உதவியினை வழங்குவதற்கான முறைமையொன்றைத் தாபித்தல். |
இலங்கை மத்திய வங்கி வைப்புக் காப்புறுதித் திட்டத்தை நிருவகித்தலும் முகாமைசெய்தலும்
• | இலங்கை மத்திய வங்கி, இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் நிருவாகத்திற்கும் முகாமைத்துவத்திற்கும் பொறுப்பாக இருத்தல் வேண்டும் என்பதுடன் 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் அதற்கு வழங்கப்பட்ட அல்லது அதன் மீது விதிக்கப்பட்ட அல்லது சாட்டப்பட்ட அனைத்து தத்துவங்களையும், கடமைகளையும் தொழிற்பாடுகளையும் பிரயோகித்தல், செயலாற்றுதல், நிறைவேற்றுதல் வேண்டும். |
• | இலங்கை மத்திய வங்கியின் வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானங்கள் திணைக்களத்திற்கு மேற்குறித்த பொறுப்புக்கள் சாட்டப்பட்டுள்ளதுடன் தற்போது இலங்கை மத்திய வங்கி வைப்புக் காப்புறுதித் திட்டத்தை முகாமைசெய்து திட்டத்தினூடாக முறிவடைந்த உறுப்பு நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு துரிதப்படுத்தப்பட்;ட விதத்தில் ஈடளிப்புக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுகின்றது. |
உறுப்பு நிறுவனங்கள் யாவை?
உறுப்பு நிறுவனம் என்பது 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் பொருள் விளக்கத்தினுள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கியொன்று அல்லது உரிமம்பெற்ற சிறப்பியல்வாய்ந்த வங்கியொன்று அல்லது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் பொருள் விளக்கத்தினுள் உரிமம்பெற்ற நிதிக் கம்பனியொன்று அல்லது காலத்திற்குக் காலம் இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்படக்கூடிய ஏதேனும் வேறு நிறுவனம் எனப் பொருள்படும். தற்போது, அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளும், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளும், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் உறுப்பு நிறுவனங்களாக இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்துடன் பதிவுசெய்துள்ளன.
இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற வைப்புக் காப்புறுதி
• | உறுப்பு நிதியியல் நிறுவனமொன்று முறிவடைகின்ற சந்தர்ப்பமொன்றில் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் குறித்துரைக்கப்பட்ட உயர்ந்தபட்ச பணத்தொகை வரை காப்பீடுசெய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு ஈடளிக்கப்படுகின்றது. இது, ‘காப்பீடு’ என அறியப்படுவதுடன் தற்போதைய இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் காப்பீடு, நிறுவனமொன்றுக்கு என்ற அடிப்படையில் வைப்பாளர் ஒருவருக்கு ரூ.1,100,000 ஆகும். இலங்கை ரூபா மற்றும் வெளிநாட்டு நாணயம் இரண்டிலும் பெயர்குறிக்கப்பட்ட காப்பீட்டினைக் கணிப்பிடுகின்ற போது ஒவ்வொரு வைப்பாளரினதும் அனைத்து காப்புறுதி செய்யப்பட்ட வைப்புப் பொறுப்புக்களும் உறுப்பு நிறுவனத்தின் உரிமம் இரத்துச்செய்யும் திகதியிலுள்ளவாறு ஏதேனும் ஒன்றுசேர்ந்த வட்டி உள்ளடங்கலாக அதன் சமமான இலங்கை ரூபா பெறுமதிக்கு ஒன்றாகச்சேர்க்கப்படுகின்றன. |
• | இணைத்த வைப்புக்கள் விடயத்தில் ஒவ்வொரு இணைந்த வைப்பாளரும் வெவ்வேறான வைப்பாளர்களாகக் கருத்தப்படுவதுடன் உறுப்பு நிறுவனத்தில் அவர் உரித்தாகக் கொள்கின்ற அனைத்து காப்புறுதி செய்யப்பட்ட வைப்புக்களையும் கருத்திற்கொண்டு ரூ.1,100,000 கொண்ட உயர்ந்தபட்சத் தொகை வரை அவருக்கு ஈடளிக்கப்படும். |
• | மரணமடைந்த வைப்பாளர் ஒருவரின் கோரிக்கைக்காக பல பயன்பெறுநர்கள் காணப்படுகின்றவிடத்து ரூ.1,100,000 வரையிலான தனிப்பட்ட கொடுப்பனவு மொத்த வைப்புக்களின் அவர்களது உரிய பங்கிற்கு அமைவாக பயன்பெறுநர்களிடையே விகிதசமமாகப் பிரிக்கப்படுகின்றது. |
இலங்கை வைப்புக் காப்புறுதி நிதியம்
• | திட்டத்தின் தொழிற்பாட்டின் பாகமொன்றாக இலங்கை மத்திய வங்கி இலங்கை வைப்புக் காப்புறுதி நிதியமொன்றினைத் தாபித்தல் வேண்டும். அது, இலங்கை மத்திய வங்கியின் வேறு சொத்துக்களிலிருந்து தனியாக முகாமைசெய்யப்படுதல் வேண்டும். |
• | 2023 இறுதியிலுள்ளவாறு, ரூ.110,234.4 மில்லியன் கொண்ட மொத்த நிதி அளவுடன் (கணக்காய்வு செய்யப்பட்டது) 63 உறுப்பு நிறுவனங்களை இத்திட்டம் உள்ளடக்கியிருந்தது. இலங்கை வைப்புக் காப்புறுதி நிதியம் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. |
விடயம் | தொகை (ரூ. மில்) |
|
2022.12.31இல் உள்ளவாறு |
2023.12.31இல் உள்ளவாறு | |
நிதியத்தின் அளவு | 86,107.9 | 110,234.4 |
ஏனைய அனைத்தையுமுள்ளடக்கிய வருமான ஒதுக்கு | (25,931.5) | 2,528.3 |
இலங்கை வைப்புக் காப்புறுதி நிதியத்தின் மொத்த பங்குரிமை மூலதனம் | 60,176.4 | 112,762.6 |
மொத்த வருமானம் | 24,882.9 | 32,897.5 |
மொத்தச் செலவினம் | (226.3) | 934.9 |
ஆண்டிற்கான மிகை (வரிக்கு முன்னர்) | 24,656.6 | 33,832.4 |
வருமான வரி | (6,436.1) | (9,705.9) |
ஆண்டிற்கான மிகை (வரிக்கு பின்னர்) | 18,220.6 | 24,126.5 |
மொத்தச் சொத்துக்கள் | 69,017.6 | 121,356.3 |
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தினூடான சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சாதனங்கள் |
63,596.0 | 116,464.0 |
பெறுமதி குறைக்கப்பட்ட செலவில் நிதியியல் சாதனங்கள் | 192.7 | 97.4 |
நட்டஈட்டுக் கொடுப்பனவு
• | நாணயச் சபையினால் உரிமம் இரத்துச்செய்யப்பட்டுள்ள அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ள ஏழு (07) நிதிக் கம்பனிகளின் அதாவது, சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட், ரி.கே.எஸ் பினான்ஸ் லிமிட்டெட், த பினான்ஸ் கம்பனி பிஎல்சி, ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிட்டெட், சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விசர்ஸ் பிஎல்சி மற்றும் பிம்புத் பினான்ஸ் பிஎல்சி வைப்பாளர்கள் வைப்பாளர் ஒருவருக்கு ரூ.1,100,000 கொண்ட ஈடளிப்பினைப் பெறுவதற்குத் தகைமையுடையவராவர். |
• | 2023.12.31இல் உள்ளவாறு இலங்கை வைப்புக் காப்புறுதி நிதியத்தினால் கொடுப்பனவு செய்யப்பட்ட மொத்த ஈடளிப்பு கீழே தரப்பட்டுள்ளது: |
கம்பனியின் பெயர் | மொத்த காப்புறுதி செய்யப்பட்ட பெறுமதி (ரூ. மில்.) | கொடுப்பனவு செய்யப்பட்ட வைப்பாளர்களின் எண்ணிக்கை | கொடுப்பனவு செய்யப்பட்ட ஈடளிப்பு (ரூ.மில்.) | மொத்த காப்புறுதி செய்யப்பட்ட பெறுமதியின் சதவீதமாக கொடுப்பனவு செய்யப்பட்ட ஈடளிப்பு |
சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி | 2,465.66 | 3,502 | 1,996.15 | 80.96% |
ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட் | 1,667.54 | 2,539 | 1,322.31 | 79.30% |
ரி.கே.எஸ் பினான்ஸ் லிமிட்டெட் | 1,190.74 | 2,016 | 1,074.31 | 90.22% |
த பினான்ஸ் கம்பனி பிஎல்சி | 14,729.72 | 35,856 | 12,710.55 | 86.29% |
ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிட்டெட் | 13,916.11 | 27,064 | 12,771.50 | 91.77% |
சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விசர்ஸ் பிஎல்சி | 1,247.88 | 2,668 | 1,127.90 | 90.39% |
பிம்புத் பினான்ஸ் பிஎல்சி | 58.61 | 5 | 0.27 | 0.46% |
மொத்தம் | 35,276.26 |
73,650 | 31,002.99 | 87.89% |
ஈடளிப்புக் கொடுப்பனவிற்கான உரிமைக் கோரிக்கைப் படிவம்
இலங்கை வைப்புக் காப்புறுதி நிதியத்தின் நிதியியல் கூற்றுக்கள்
ஊடக அறிவித்தல்
24.12.2024 இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் உறுப்பு நிறுவனங்கள்
பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வர்த்தமான பத்திரிகைகள்
எம்முடன் தொடர்புகொள்ள
அஞ்சல் முகவரி: பணிப்பாளர், வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானங்கள் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01, இலங்கை.
தொலைபேசி இல: 0112477261
மின்னஞ்சல்: sldis@cbsl.lk , ddir@cbsl.lk
தொலைநகல்: 0112477748
தொடர்புடைய ஆவணங்களும் இணைப்புக்களும்
2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
பன்னாட்டு வைப்புக் காப்புறுதியாளர்கள் அமைப்பின் வலைத்தளம்