அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நாணயக் கொள்கை
நாணயக் கொள்கை என்றால்?
நாணயக் கொள்கை என்பது விலை உறுதிப்பாட்டை அடையும் முக்கிய நோக்குடன் பொருளாதாரமொன்றிலுள்ள பணத்தின் நிரம்பல் மற்றும் செலவை (பண நிரம்பல்/ திரவத்தன்மை) மத்திய வங்கி முகாமைப்படுத்தும் செயன்முறையாகும்.
நாணயக் கொள்கையினை நடாத்துவதற்கு யார் பொறுப்பாகவுள்ளனர்?
இலங்கையில் நாணயக் கொள்கையினை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரி இலங்கை மத்திய வங்கியாகும். 2023 செத்தெம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வித்தில் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டம் இயற்றப்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் நாணயக் கொள்கைத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கையை வகுத்து உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினைப் பேணும் அதன் முதன்மைக் குறிக்கோளினை அடைவதற்கேற்ப நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புடன் இசைந்துசெல்லும் விதத்தில் நெகிழ்ச்சித்தன்மைவாய்நத செலாவணி வீத எல்லையினை நடைமுறைப்படுத்துவதற்கு நாணயக் கொள்கைச் சபை பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
ஆளுநரினால் தலைமை வகிக்கப்படுகின்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு நாணயச் சபைக்கு நாணயக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கு பொறுப்புடையதாகும். தோற்றம்பெறுகின்ற பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகளை மதிப்பீடு செய்தல் என்பவற்றுடன் உள்நாட்டு விலை உறுதிப்பாட்டனை உறுதிப்படுத்தும் மத்திய வங்கியின் முதன்மைக் குறிக்கோளினை அடையும் வகையில் நாணயச் சபையின் பரிசீலனைக்காக நாணயக் கொள்கையின் பொருத்தமான எதிர்காலப் பணிப்புரைகளின் மீது விதந்துரைப்புக்களை மேற்கொள்தல் என்பன நாணயக் கொள்கைச் சபையின் முதனிலை தொழிற்பாடாகும்.
இலங்கை மத்திய வங்கியின் நடைமுறை நாணயக் கொள்கைக் கட்டமைப்பு யாது?
தற்பொழுது, மத்திய வங்கியானது நாணயக் கொள்கைக் கட்டமைப்பு உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டவாறு இலக்கிடப்பட்ட மட்டங்களில் பணவீக்கத்தினைப் பேணுவதை இலக்காகக் கொண்ட நெகிழ்ச்சியான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புடன் இசைந்துசெல்லும் விதத்தில் நாணயக் கொள்கையினை நடத்துகின்ற அதேவேளை பொருளாதார வளர்ச்சியானது அதன் உள்ளார்ந்ததன்மையினை அடைந்துகொள்வதற்கு துணையளிக்கின்றது.
அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கிடையிலான தற்போதைய நாணயக் கொள்கைக் கட்டமைப்பு உடன்படிக்கை 2023 ஒத்தோபர் 05 அன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
நெகிழ்ச்சிவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பு என்றால் என்ன?
நெகிழ்ச்சிவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பொன்றின் கீழ் நடாத்தப்படும் நாணயக் கொள்கையை பணவீக்க இலக்கினைச் சூழப் பணவீக்கத்தை நிலைப்படுத்துகின்ற அதேவேளை உண்மைப் பொருளாதாரத்திற்கான இடைத்தடங்கலினைக் குறைப்பதை இலக்காக் கொண்டுள்ளது. தற்போது நிதி அமைச்சிற்கும் மத்திய வங்கிக்குமிடையில் நாணயக் கொள்கை கட்டமைப்பு உடன்படிக்கையின் மூலம் தீர்மானிக்கப்பட்டவாறு 5 சதவீதத்தில் பணவீக்கத்தைப் பேணுவதை இலக்காகக் கொண்டு, நெகிழ்ச்சிவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பிற்கமைவாக, மத்திய வங்கி நாணயக் கொள்கையை நடாத்துகின்றது (அரசாங்க வர்த்தமானி).
அதன் நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் பயன்படுத்தப்படும் சாதனங்கள் யாவை?
நாணயக் கொள்கை சாதனங்களாகப் பயன்படுத்தப்படுவதற்கு இலங்கை மத்திய வங்கி பல வகையிலான கருவிகளை கொண்டிருக்கின்றது. முக்கிய சாதனங்களாக ஓரிரவு கொள்கை வீதம், திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், துணைநில் வசதிகள், மற்றும் நியதி ஒதுக்குத் தேவைப்பாடு என்பன காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, கொடுகடன் மீதான அளவுசார் கட்டுப்பாடுகள், வட்டிவீதங்கள் மீதான உச்சங்கள், மற்றும் தார்மீகப் பொறுப்பு அதேபோன்று தொடர்பூட்டல் மற்றும் முன்னோக்கிய வழிகாட்டல் என்பனவும் பயன்படுத்தப்படலாம். நாணயக் கொள்கையினை நடத்துவதற்கு பொருத்தமான சாதனங்களை தெரிவுசெய்கின்ற சுயாதீனத்தை மத்திய வங்கி கொண்டுள்ளது.
ஓரிரவு கொள்கை வீதம் என்றால் என்ன?
ஓரிரவு கொள்கை வீதம் என்பது ஒற்றை கொள்கை வட்டி வீதப் பொறிமுறையின் (2024 நவெம்பர் 27 அன்று தொடக்கம் நடைமுறைக்குவந்தது) கீழ் காணப்படும் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் ஆகும். இது மத்திய வங்கியின் கொள்கை நிலைப்பாட்டை சமிஞ்சைப்படுத்துகின்ற முதன்மை நாணயக் கொள்கையாகும். பணவீக்கத்தின் விரும்பத்தக்க பாதையொன்றினை அடையும் நோக்குடன், பொருளாதாரத்தின் வட்டி வீத அமைப்பிற்கு வழிகாட்டுவதற்காக, அவசியமானவிடத்து, ஓரிரவு கொள்கை வீதம் கால முறையாக மீளாய்வு செய்யப்பட்டு பொருத்தமான விதத்தில் சீராக்கப்படுகின்றது.
ஓரிரவு கொள்கை வீதத்தை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதத்தினதும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினதும் பயன்பாடு 2024 நவெம்பர் 27 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் நிறுத்தப்பட்டது. மத்திய வங்கியின் துணைநில் வசதிகளுக்கு ஏற்புடைய துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பன நாணய கொள்கைச் சபையினால் தீர்மானிக்கப்பட்டவாறு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட எல்லையொன்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பண வீதங்களுக்கு முறையே, குறைந்த எல்லை மற்றும் உயர்ந்தளவான எல்லையை தொடர்ந்தும் வழங்குகின்றது.
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் (AWCMR) என்றால் என்ன?
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் (AWCMR) என்பது வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணக் கொடுக்கல்வாங்கல்களினதும் வர்த்தக வங்கிகளுக்கிடையிலான ஓரிரவு பிணையமளிக்கப்படாத கொடுக்கல்வாங்கல்களினதும் சராசரி நிறையேற்றப்பட்ட வீதமாகக் காணப்படுவதுடன், இது இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகச் செயற்படுகின்றது.
திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்றால் என்ன?
திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பது இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைக்கு அமைவாக சந்தைத் திரவத் தன்மையினைப் பொருத்தமான மட்டங்களில் பேணுவதற்காக ஏற்றுக்கொள்ளத்தக்க பிணையங்களைப் பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்படுகின்ற சந்தை அடிப்படையில் அமைந்த நாணயக் கொள்கை தொழிற்பாடுகள் ஆகும். இந்நோக்கத்திற்காக இலங்கை மத்திய வங்கியானது அரசாங்க அல்லது அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்ட பிணையங்களையும் இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான பிணையங்களையும் பயன்படுத்தலாம்.
ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவின் வகிபாகம் என்ன?
ஆர்வலர் ஈடுபாட்டுக் குழு தலைசிறந்த தொழில்சார் நிபுணர்;கள், கல்வியலாளர்கள் மற்றும் தனியார் துறை ஆளணியினர் உள்ளடங்கலாக பல்தரப்பட்ட ஆர்வலர்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தின் நாணய மற்றும் நிதியியல் துறைகளின் அபிவிருத்தி உள்ளடங்கலாக ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு பொருளாதார நிலைமைகள் மற்றும் தோற்றப்பாடு தொடர்பில் தனியார் துறையினதும் கல்வியலாளர்களினதும் அபிப்பிராயங்களையும் எண்ணப்பாங்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதே இவ் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் முதன்மை வகிபாகமாகும். மேலும், இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் கொள்கைசார்ந்த வழிமுறைகள் மீது பொருளாதார ஆர்வலர்களின் நோக்கிலிருந்து பின்னூட்டலை வழங்குவதற்கு ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதுடன் இதனூடாக மிகவும் ஆலோசனைபெற்ற விதத்தில் சிறந்த கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினை இயலச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையிலுள்ள முக்கிய நாணயக் கூட்டுக்கள் யாவை?
இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணய கூட்டுக்களின் முக்கிய வரைவிலக்கணம் பின்வருமாறு;
- ஒதுக்குப்பணம்/ நாணயத் தளம் - செலுத்த வேண்டிய நாணயத்தினை (பொதுமக்கள் மூலம் வைத்திருக்கப்படும் நாணயமும் வணிக வங்கிகளுடனான நாணயமும்), இலங்கை மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியுடனான அரசாங்க முகவராண்மைகளின் வைப்புக்களை உள்ளடக்குகின்றது.
- ஒடுங்கிய பணம் (M1) - பொதுமக்களால் வைத்திருக்கப்படும் நாணயத்தையும் வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கேள்வி வைப்புகளையும் உள்ளடக்குகின்றது.
- விரிந்த பணம் (M2) - ஒடுங்கிய பண நிரம்பலையும் வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகளையும் உள்ளடக்கப்படுகின்றது.
- விரிந்த பணம் (M2b) - ஒடுங்கிய பண நிரம்பல், வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகள் என்பவற்றை உள்ளடக்கப்படுவதுடன் வணிக வங்கிகளின் வெளிநாட்டு நாணய வைப்புளின் ஒரு பகுதியினையும் உள்ளடக்குகின்றது.
- விரிந்த பணம் (M4) - விரிந்த பணம் (M2b) நிரம்பல் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மூலம் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகள் என்பவை உள்ளடக்கப்படுகின்றது.
சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் (AWLR) என்றால் என்ன?/சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதம் (AWPR) என்றால் என்ன?
சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் என்பது தனியார் துறைக்கு வணிக வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து நிலுவையாக உள்ள கடன்களினதும் முற்பணங்களினதும் வட்டி வீதங்களின் அடிப்படையில் மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது.
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதமானது வாரத்தின் போது தமது முதன்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வணிக வங்கியின் கடன்வழங்கல் வீதங்களின் அடிப்படையில் வாராந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது.
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (AWDR) என்றால் என்ன?/ சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் (AWFDR) என்றால் என்ன?
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (AWDR) என்பது வர்த்தக வங்கிகளின் வசமிருந்த சகல வெளிநின்ற வட்டி உழைக்கின்ற ரூபா வைப்புக்களினதும் நிறையேற்றப்பட்ட சராசரி வீதங்களின் அடிப்படையில் மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது.
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதமும் (AWFDR) வர்த்தக வங்கிகளின் வசமிருந்த சகல வெளிநின்ற வட்டி உழைக்கின்ற ரூபா தவணை வைப்புக்களினதும் நிறையேற்றப்பட்ட சராசரி வீதங்களின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் (AWNDR) என்றால் என்ன?/சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம் (AWNLR) என்றால் என்ன?
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதமானது (AWNDR) ஒரு மாத காலப்பகுதியின் போது வணிக வங்கிகளில் வைக்கப்பட்ட அனைத்து புதிய வட்டியுடைய வைப்புகளினதும் தொடர்புடைய வட்டி வீதங்களைக் உள்ளடக்குகின்றது.
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம் (AWNLR) என்பது ஒரு மாத காலப்பகுதியின் போது வணிக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட அனைத்து புதிய கடன்கள் மற்றும் முற்பணங்களினதும் வட்டி வீதங்களைக் உள்ளடக்குகின்றது.
சட்ட ரீதியான/ சந்தை வட்டி வீதம் என்றால் என்ன?
சட்ட ரீதியான வீதமானது 1990ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க குடியியல் நடைமுறைக் கோவை (திருத்தம்) சட்டத்தின் கீழ் வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதுடன் பணத்தொகையொன்றினை மீள அறவிடுவதற்கான ஏதேனும் நடவடிக்கைக்கு ஏற்புடையதாகும். சந்தை வீதமானது 1990ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க படுகடன் மீள அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இணங்கிய வட்டி வீதம் காணப்படாத வர்த்தக ரீதியான கொடுக்கல்வாங்கல்களிலிருந்து தோன்றுகின்ற ரூ.150,000 தொகையினை விஞ்சுகின்ற படுகடனை மீள அறவிடுவதற்காக கடன் வழங்கும் நிறுவனங்களினால் தொடுக்கப்படும் வழக்குகள் தொடர்பில் மாத்திரம் ஏற்புடையதாகும்.
ஆண்டொன்றுக்கான சந்தை வீதமும் சட்ட ரீதியான வீதமும் முன்னுறுகின்ற பன்னிரண்டு மாதங்களில் நிலவிய அனைத்து வணிக வங்கிகளினதும் மாதாந்த சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதங்களில் சாதாரண சராசரிகளைக் கருத்திற்கொண்டு திசெம்பர் மாதத்தில் கணிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கிக்குமிடையிலான நாணயக் கொள்கை கட்டமைப்பு உடன்படிக்கையின் நோக்கம் என்ன?
நாணயக் கொள்கை கட்டமைப்பு உடன்படிக்கை என்பது பொதுவாக பெரும்பாலும் நிதி அமைச்சினால் தலைமைதாங்கப்படும் அரசாங்கத்திற்கும் நாட்டின் மத்திய வங்கிக்கும் இடையிலான முறைசார் உடன்படிக்கையொன்றை பிரதிநிதித்துவம்செய்கின்றது. மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டினாலும் பகிரப்படும் உறுதியான கடப்பாடொன்றாக குறிப்பிட்ட பணவீக்க இலக்கொன்றை வரையறுப்பதற்கும் அதனைப் பின்பற்றுவதற்குமான வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். இவ்வுடன்படிக்கையானது நம்பிக்கையை கட்டியெழுப்புவதிலும், பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டனை அடைவதற்கான நன்கு வரையறுக்கப்பட்ட பாதையை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கிடையிலான தற்போதைய நாணயக் கொள்கைக் கட்டமைப்பு உடன்படிக்கை 2023 ஒத்தோபர் 05 அன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
தற்போதைய பணவீக்க இலக்கு என்ன, பணவீக்க இலக்கினை அடைவதற்கு மத்திய வங்கி தவறுமிடத்து அதனை அளவிடுவது எவ்வாறு? மற்றும் மத்திய வங்கி பணவீக்க இலக்கினை அடையத் தவறுமாயின் என்ன நடக்கும்?
தற்போதைய பணவீக்க இலக்கானது காலாண்டு முதன்மைப் பணவீக்கத்தினை 5 சதவீதத்தில் பேணுவதாகும். இங்கு “காலாண்டு முதன்மைப் பணவீக்க வீதம்” என்பது தொடர்புடைய காலாண்டின் மூன்று மாதங்களுக்கான மாதாந்த கொநுவிசு இல் ஆண்டிற்கு ஆண்டு சதவீத மாற்றங்களின் சாதாரண சராசரியைக் குறிக்கின்றது, அதேவேளை “கொநுவிசு” என்பது தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணைக் குறிக்கின்றது.
முதன்மைப் பணவீக்க வீதமானது தொடர்ச்சியாக இரு காலாண்டுகளுக்கு 5 சதவீத பணவீக்க இலக்கிலிருந்து +/- 2 சதவீதப் புள்ளிகளை விட அதிகமாக விலகியிருக்குமாயின், மத்திய வங்கி பணவீக்க இலக்கினை அடையத் தவறியுள்ளதாகக் கருதப்படும்.
மத்திய வங்கி பணவீக்க இலக்கினை அடையத் தவறியிருக்குமாயின், பின்வரும் தகவல்களுடன் நிதி அமைச்சர் ஊடாக பாராளுமன்றித்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு கடமைப்பட்டுள்ளதுடன் அது பொதுமக்களுக்கும் கிடைக்கப்பெறக்கூடிதாகவிருத்தல் வேண்டும்.
(அ) பணவீக்க இலக்கினை அடையத் தவறியமைக்கான காரணங்கள்;
(ஆ) மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட வேண்டுமென முன்மொழியப்பட்ட பரிகார நடவடிக்கைகள்; அத்துடன்
(இ) பணவீக்க இலக்கு அடையப்பட வேண்டிய காலப்பகுதியின் மதிப்பீடொன்று.








