அரச பிணையங்கள் சந்தை
திறைசேரி உண்டியல் சந்தை
திறைசேரி உண்டியல் சந்தை பணச் சந்தையின் இன்னொரு பிரிவாகும். திறைசேரி உண்டியல் உயர்ந்த திரவத்தன்மை கொண்ட சந்தைச் சாதனமாக இருப்பதுடன் இது நிதியியல் நிறுவனங்களுக்கான திரவத்தன்மை மற்றும் முதலீடுகளின் மாற்று மூலமொன்றாகவும் காணப்படுகின்றது.மேலும், திறைசேரி உண்டியல் சந்தையின் வட்டி வீத அசைவுகள் குறுங்கால கொடுகடன் சந்தைக்கான அடிப்படை அளவுக்குறியீட்டினை வழங்குகின்றன. எனவே, திறைசேரி உண்டியல் சந்தையின் தொகை அளவிலும் வீதத்திலும் ஏற்படும் மாற்றங்கள் நிதியியல் நிறுவனங்களின் செலவு, இலாபத்தன்மை மற்றும் திரவத்தன்மை என்பனவற்றைப் பாதிக்கின்றன மத்திய வங்கி அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை நடத்துகையில் பிணையமாகப் பயன்படுத்தப்படும் முக்கிய பிணையங்களாகவும் திறைசேரி உண்டியல்கள் விளங்குகின்றன.
திறைசேரி முறிச் சந்தை
திறைசேரி முறி என்பது அரசாங்கம் வரவு செலவுத்திட்ட நோக்கங்களுக்காக உள்நாட்டுப் பொதுப்படுகடனைத் திரட்டும் பொழுது, 1937ஆம் ஆண்டின் 7ஆம் இலக்கத்தினால் திருத்தப்பட்டவாறான பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அதனால் வழங்கப்படும் நடுத்தர மற்றும் நீண்ட காலப் படுகடன் சாதனமொன்றாகும்.
இலங்கை அரசாங்கத்தின் முகவரொருவர் என்ற முறையில், இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களம் திறைசேரி முறிகளை வழங்குவதுடன் உரிய திகதியில் வட்டியைக் கொடுப்பனவு செய்து. முதிர்ச்சியில் முதல் தொகையினைச் செலுத்துகின்றது.
பாராளுமன்றத்தினால் ஆண்டுதோறும் ஒப்புதலளிக்கப்படும் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட வருடாந்த கடன்பாட்டு இலக்கின் நியதிகளில், இலங்கை அரசாங்கம் திறைசேரி முறிகளை வழங்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கின்றது.
திறைசேரி முறிகளின் முக்கிய பண்புகள்:
இடர்நேர்வற்றது, நிறைகாப்புடைய படுகடன் சாதனம்
2 - 20 ஆண்டுகள் வரையான முதிர்ச்சிகளில் கிடைக்கத்தக்கதாக இருக்கும்
இது அரையாண்டு நறுக்கு கொடுப்பனவுகளைக் கொண்டிருப்பதுடன் முதல் தொகை முதிர்ச்சியின் போது மீளச் செலுத்தப்படும்
விளைவு வீதங்கள் சந்தையினால் தீர்மானிக்கப்படுகின்றன
இரண்டாந்தரச் சந்தையில் விற்பனை செய்யத்தக்க சாதனம்
பத்திரங்களற்ற வடிவத்தில் வழங்கப்படுகின்றன
திறைசேரி முறிகளில் முதலீடு செய்வதனால் பெறப்படும் நன்மைகள்
இறைமை கொண்ட அரசாங்கத்தினால் இது வழங்கப்படுவதனால் இது முழுமையாக இடர்நேர்வற்ற ஒரு முதலீடாகும். எனவே, இவை நிறைகாப்புடைய பிணையங்கள் என அழைக்கப்படுகின்றன. இதன் கருத்து யாதெனில் இவை தங்கத்தினால் காப்பிடப்பட்டிருக்கின்றது என்பதாகும்.
விளைவு வீதங்கள் சந்தையில் தீர்மானிக்கப்படுவதனால் நீங்கள் உயர்ந்த வட்டி வீதங்களைப் பெறமுடியும்.
இம்முறிகளை இரண்டாந்தரச் சந்தையில் விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும் என்பதனால் சந்தையில் அவற்றை விற்பனை செய்வதன் மூலம் உடனடியாக திரவத்தன்மையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வட்டி மற்றும் முதிர்ச்சிப் பெறுகைகள் அனைத்தையும் முழுமையாகவே தாய்நாட்டிற்கு அனுப்ப முடியும்.
மற்றைய ஆளுடன் அல்லது மற்றைய சில ஆட்களுடன் சேர்ந்து கூட்டு முதலீடொன்றினை நீங்கள் மேற்கொள்ள முடியும்.
ஆரம்பத்திலேயே 10 சதவீத பிடித்துவைத்தல் வரி விதிக்கப்படுவதனால் மேலதிக வரி எதற்கும் நீங்கள் உட்படமாட்டீர்கள்.
இம்முறிகள் மீது முத்திரை வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை.
இலங்கை மத்திய வங்கி இம்முதலீடுகளை மிக நவீனத்துவமான பத்திரங்களற்ற தீர்ப்பனவு முறையிலும் தன்னியக்கப்படுத்தப்பட்ட மத்திய வைப்பக முறைமையிலும் பேணுகின்றது.
திறைசேரி முறிகளுக்கு விண்ணப்பித்தல்
திறைசேரி முறிகளை இலங்கை மத்திய வங்கியுடன் பதிவுசெய்து கொண்டுள்ள முதனிலை வணிகர்களினூடாக அல்லது உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக எந்தவொரு நேரத்திலும் கொள்வனவு செய்துகொள்ள முடியும். முதனிலை வணிகர் என்போர் அரச பிணைகளை வர்த்தகப்படுத்துவதற்காக மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட நிறுவனங்களாகும்.
திறைசேரி முறிகளை இரண்டாந்தரச் சந்தையிலிருந்தும் அல்லது முதனிலை வணிகர்களினூடாக முதலாந்தர ஏலங்களில் விலைக்குறிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலமும் கொள்வனவு செய்து கொள்ளமுடியும்.
நிதியினை மாற்றல் செய்யும் நோக்கத்திற்காக, ''பிணையங்கள் முதலீட்டுக் கணக்கு'' என்ற பெயரிலான ரூபாக் கணக்கொன்றினை இலங்கையிலுள்ள உரிமம் பெற்ற வர்த்தக வங்கியொன்றில் திறக்கமுடியும்.
கொடுக்கல்வாங்கல்கள் நிறைவடைந்ததும் இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படும் மத்திய வைப்பக முறைமையில் பிணையக் கணக்கொன்று உரிமம் பெற்ற வர்த்தக வங்கியினால்/ முதனிலை வணிகரினால் திறக்கப்படும்.
திறைசேரி முறிகளின் கிடைப்பனவு
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்தவொரு நேரத்திலும் வெளிநின்ற மொத்த திறைசேரி உண்டியல் மற்றும் முறிகள் இருப்பின் 10 சதவீதம் வரையிலான தொகையினைக் கொள்வனவு செய்யமுடியும். தகுதியுடைய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்தவொரு முதிர்ச்சி காலத்துடனும் திறைசேரி உண்டியல் மற்றும் முறிகளைக் கொள்வனவு செய்ய, விற்க அல்லது மாற்றல் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
திறைசேரி முறிகளுடன் தொடர்பான வட்டியும் முதிர்ச்சித் தொகைகளும் உரிய திகதியில் உரிய தொகையினைச் செலுத்துவதற்குப் பொறுப்பான உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்/ முதனிலை வணிகர்களினூடாக முதலீட்டாளரின் கணக்கிற்கு உரிய திகதியில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
திறைசேரி முறிகள் தொடர்பான தகவல்களைப் பெறுதல்
கிடைக்கத்தக்கதாக திறைசேரி முறிகள் மற்றும் நிலவுகின்ற சந்தை வீதங்கள் மீதான தகவல்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் முதனிலை வணிகர்களிடமிருந்தும் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திலிருந்தும் (www.cbsl.gov.lk) பெற்றுக்கொள்ள முடியும்.
நடைமுறை ஏலங்களின் விபரங்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளிலிருந்தும் முதனிலை வணிகர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்திட்டம் தொடர்பான எந்தவொரு விபரத்தினையும் இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.