கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்

பொதுநோக்கு

இலங்கை மத்திய வங்கி, நாட்டில் தேசிய கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையின் அபிவிருத்தியில் ஒரு தூண்டல் விசையாக இருந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவு முறைமையினை பாதுகாப்பானதாகவும், பத்திரமானதாகவும், ஆற்றல் வாய்ந்த்தாகவும், வினைத்திறன்மிக்கதாகவும் மற்றும் நாடு முழுவதும் அடையப்படத்தக்கதாகவும் மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது.

கொடுப்பனவு, கொடுத்துத் தீர்த்தல் முறைமைகளை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்யவும் நாட்டில் அனைத்துக் கொடுப்பனவுகளையும் தீர்ப்பனவு முறைமைகளையும் ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்வதற்கான கொள்கைகளை விரித்துரைக்கவும் நியமங்களை நிர்ணயிப்பதற்குமான அதிகாரங்களை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டம் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்குகிறது. கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைச் சட்டத்தின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கி அதிகாரமளித்தாலொழிய மத்திய வங்கி தவிர்ந்த எந்தவொரு சட்ட ரீதியான நிறுவனமும் இலங்கையில் கொடுப்பனவு முறைமைகளை ஆரம்பிக்கவோ தொழிற்படுத்தவோ முடியாது. 2002இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களம் இலங்கை மத்திய வங்கியின் சார்பில் இத்தொழிற்பாடுகளை மேற்கொள்கின்றது.

மேலும், மத்திய வங்கி, தேசிய கொடுப்பனவு முறைமைகளுக்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கும் கொடுப்பனவு, தீர்ப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகளை உருவாக்கி அபிவிருத்தி செய்வதற்கான வழிகாட்டல்களையும் தலைமைத்துவத்தையும் வழங்குவதற்கும் பொறுப்பாக இருக்கிறது. மேலும், கொடுப்பனவு முறைமையிலுள்ள முக்கிய ஆர்வலர்களை உள்ளடக்கியுள்ள தேசிய கொடுப்பனவுகள் ஆணைக்குழுவிற்கு மத்திய வங்கி தலைமை தாங்குகின்றது. தேசிய கொடுப்பனவுகள் ஆணைக்குழு இலங்கையில் நிதியியல் உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதற்கான விதந்துரைப்புக்களை வழங்குகின்றது.

கொடுப்பனவு முறைமையாது தனிப்பட்டவர்கள் தொடக்கம் வங்கிகள், அரசாங்கங்கள் மற்றும் பன்னாட்டு பங்கு பற்றுநர்கள் வரையான அனைத்துப் பங்கு பற்றுநர்களும் பொருளாதாரமொன்றிற்குள்ளும் நாடுகளைக் கடந்தும் எவ்வாறு நாணயப் பெறுமதியினை பரிவர்த்தனைகள் செய்கிறார்கள் என்பதனைப் பற்றியதாகும். இது, கொடுப்பனவுகளை ஆளுகை செய்யும் சட்டம், ஒழுங்குவிதிகள், பொறிமுறை முறைமைகள், நடைமுறைகள் மற்றும் உடன்படிக்கைகள் என்பனவற்றையெல்லாம் கொண்டதொரு கட்டமைப்பாகும்.

கொடுப்பனவுகளை, கொடுப்பனவின் பெறுமதி மற்றும் கொடுப்பனவினை முன்னெடுக்கும் தரப்பின் வகை என்பனவற்றினைப் பரிசீலனையில் கொண்டு, பாரிய பெறுமதி மற்றும் சில்லறைப் பெறுமதி என வகைப்படுத்த முடியும். பாரிய பெறுமதிக் கொடுப்பனவுகள் என்பது பொதுவாக நிதியியல் நிறுவனங்களினால் ஒப்பீட்டு ரீதியில் குறைந்த பெறுமதியைக் கொண்டனவாக மேற்கொள்ளப்படும் உயர் பெறுமதிக் கொடுப்பனவுகளாகவுள்ளவிடத்து, சில்லறைக் கொடுப்பனவுகள் தனிப்பட்டவர்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. பாரிய பெறுமதியினைக் கொண்ட கொடுப்பனவு முறைமைகள் முறிவடைகையில் அது முழு நிதியியல் முறைமையினதும் தொழிற்பாடுகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தன்மையினைக் கொண்டிருப்பதனால் அத்தகைய முறைமை முறையியல் ரீதியில் முக்கியத்துவமிக்க சார்ந்த கொடுப்பனவு முறைமையெனக் கருதப்படுகிறது. இலங்கை மத்திய வங்கி, அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இடர்நேர்வுகளைத் தணிப்பதுடன், இதன் வாயிலாக நிதியியல் நிறுவனங்கள் தமது அதேநேர பாதுகாப்பான மாற்றமுடியாத கடப்பாடுகளைத் தீர்ப்பனவு செய்வதற்கும் அவற்றை அனுமதிக்கிறது. அரச பிணையங்கள் (உ-ம்: திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள்) தீர்ப்பனவு முறைமையுடன் சேர்த்து அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை இலங்கையில் லங்கா செட்டில் முறைமை என அழைக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கும் முதனிலை வணிகர்களுக்கும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு வசதிகளை வழங்குவதற்குப் பொறுப்பாக இருக்கின்றது. வங்கிகளுக்கான வங்கியாளர் என்ற ரீதியில், மத்திய வங்கி லங்கா செட்டில் முறைமையில் பங்கேற்பாளர்களாக இருக்கும் இந்நிறுவனங்களுக்கு தீர்ப்பனவுக் கணக்கு வசதிகளையும் வழங்குகின்றது.

மாறாக, சில்லறைக் கொடுப்பனவு முறைமைகள் பொருளாதாரத்தில் அவை கொண்டிருக்கும் பரந்தளவு பயன்பாட்டின் காரணமாக சமூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கி காசோலைகள், இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை மற்றும் பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி போன்ற சில்லறைக் கொடுப்பனவுகளின் தீர்ப்பனவுகளுக்கு வசதியளிப்பதற்கும் அவற்றுக்கு ஒழுங்குவிதிகளை விடுத்து இவற்றுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து விதிக்கத்தக்க உயர்ந்தபட்சக் கட்டணம் பற்றி மத்திய வங்கி குறித்துரைக்கிறது. மத்திய வங்கி பொறுப்புடையதாகும். சில்லறைக் கொடுப்பனவுகளுக்கான தீர்வகத்தின் தொழிற்பாடுகள் இலங்கை மத்திய வங்கிக்கும் வர்த்தக வங்கிகளுக்கும் கூட்டாக சொந்தமான கம்பனியான லங்கா கிளியர் (பிறைவேற்) லிமிடெட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கி குறைந்த பெறுமதி கொண்ட சில்லறைக் கொடுப்பனவுகளைக் கருத்திற் கொண்டு இரண்டு செல்லிடக் கொடுப்பனவு முறைமைகளுக்கு உரிமங்களை வழங்கியிருப்பதுடன் அவை இரண்டும் தொலைத்தொடர்பூட்டல் பணி வழங்குவோரின் கீழ் தொழிற்படுகின்றன.

சட்டக் கட்டமைப்பு

2005ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டமானது கொடுப்பனவு, தீர்ப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகள், பணச் சேவைகளை வழங்குவோரை ஒழுங்குபடுத்தல் மற்றும் இலங்கையில் காசோலைகளை இலத்திரனியல் முறையில் சமர்ப்பித்தல் என்பனவற்றை ஒழுங்குபடுத்தி, மேற்பார்வை செய்து கண்காணிப்பதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது.

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட 2013ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க கொடுப்பனவு அட்டை மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகள் ஒழுங்குவிதிகள் கொடுப்பனவு அட்டைகள் வழங்குவோர், கொடுப்பனவு அட்டைகளின் நிதிக் கையேற்பாளர்கள், செல்லிடக் கொடுப்பனவு முறைமைகளை அடிப்படையாகக் கொண்ட வாடிக்கையாளர் கணக்குகளின் தொழிற்பாட்டாளர்கள் மற்றும் இ-பண முறைமைகளை அடிப்படையாகக் கொண்ட செல்லிடத் தொலைபேசி தொழிற்பாட்டாளர்கள் ஆகியோருக்கான ஒழுங்குவிதிகளை வழங்குகின்றன.

முறையியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கொடுப்பனவு முறைமைகள்

முறையியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உயர் பெறுமதி கொடுப்பனவு மற்றும் பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையான லங்கா செட்டில் முறைமையினை (அதேநேரக் கொடுப்பனவு முறைமை மற்றும் லங்கா செகுயர்) இலங்கை மத்திய வங்கி தொழிற்படுத்துகின்றது. லங்கா செட்டில் முறைமை மூன்று கூறுகளைக் கொண்டிருக்கிறது. அதாவது அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை (இது பாரிய பெறுமதி கொண்ட மற்றும் நேர முக்கியத்துவம் வாய்ந்த கொடுப்பனவு அறிவுறுத்தல்களைச் செயன்முறைப்படுத்துகிறது), லங்கா செகுயர் முறைமை (பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை) மற்றும் பிணையங்களின் மத்திய வைப்பக முறைமை என்பனவே அவை. அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை மற்றும் லங்கா செகுயர் முறைமை என்பனவற்றின் ஒருங்கிணைப்பு, பத்திரங்களற்ற பிணையங்கள் கொடுக்கல்வாங்கல்களுக்கான வழங்கல் எதிர் கொடுப்பனவு அடிப்படையில் மிகப் பாதுகாப்பான பிணையங்கள் தீர்ப்பனவு பொறிமுறையினை வழங்குகின்றது. லங்கா செட்டில் மற்றும் லங்கா செகுயர் முறைமைகள் இலங்கை மத்திய வங்கியின் முறையே கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தினாலும் பொதுப்படுகடன் திணைக்களத்தினாலும் தொழிற்படுத்தப்படுகின்றன.

வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள், அரச பிணையங்கள் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள், திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கொடுக்கல்வாங்கல்கள், தேறிய காசோலைத் தீர்ப்பனவுக் கொடுக்கல்வாங்கல்கள், வங்கிகளுக்கிடையிலான சில்லறைக் கொடுப்பனவு முறைமை மற்றும் பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி கொடுக்கல்வாங்கல்கள் என்பன அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையினூடாகத் தீர்ப்பனவு செய்யப்படும் முக்கிய கொடுப்பனவு வகைகளாகும்.

அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை

அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையானது இலத்திரனியல் நிதியத் தீர்ப்பனவு முறைமையொன்றாக இருப்பதுடன் இது, அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையிலுள்ள பங்கேற்பாளர் தீர்ப்பனவுக் கணக்கிலுள்ள நிதியங்களைப் பயன்படுத்தி அதேநேர அடிப்படையில் ஒவ்வொரு கொடுப்பனவு அறிவுறுத்தல்களையும் தனிப்பட்ட முறையிலும் மீட்புச் செய்ய முடியாத விதத்திலும் செயன்முறைப்படுத்தி தீர்ப்பனவு செய்து வருகின்றது. அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையில் தீர்ப்பனவு செய்யப்பட்டுகின்ற கொடுக்கல்வாங்கல்களின் பெறுமதி இலங்கையில் காசல்லா கொடுப்பனவுகளில் ஏறத்தாழ 85 சதவீதத்திற்கு வகைகூறுகிறது. அதேநேர மொத்தத் தீர்ப்பனவு கொடுக்கல்வாங்கல்களில் பெரும்பாலானவை வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள், அரச பிணையங்கள் சந்தை, திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ரூபாப் பிரிவின் கொடுக்கல்வாங்கல்கள், வாடிக்கையாளரின் அவசரக் கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படும் தீர்ப்பனவு முறைமையின் கீழான தேறிய கடப்பாடுகள் என்பனவற்றுடன் தொடர்புபட்டவைகளாகக் காணப்படுகின்றன.

தீர்ப்பனவு இடர்நேர்வுகளைத் தணிக்கும் வழிமுறையொன்றாக, இலங்கை மத்திய வங்கி, லங்கா செகுயர் முறைமையிலுள்ள பத்திரங்களற்ற பிணையங்களின் பிணைகளுக்கெதிராக கட்டணங்களின்றி பங்கேற்கின்ற உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் முதனிலை வணிகர்களுக்கு ஒரு நாளுக்குள்ளேயான திரவ வசதிகளை வழங்குகின்றது.

லங்கா செகுயர் – பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை மற்றும் பத்திரங்களற்ற பிணையங்கள் வைப்பக முறைமை

லங்கா செகுயர் முறைமையானது பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையினையும் பத்திரங்களற்ற மத்திய வைப்பக முறைமையினையும் உள்ளடக்குகிறது. லங்கா செகுயர், அரச பிணையங்களையும் மத்திய வங்கிப் பிணையங்களையும் இலத்திரனியல் அல்லது படிவங்களற்ற வடிவத்தில் வழங்குவதற்கும் அத்தகைய பத்திரங்களற்ற பிணையங்களை வழங்கல் எதிர் கொடுப்பனவு அடிப்படையில் தீர்ப்பனவு செய்வதற்கும் வசதிகளை வழங்குகின்றது. இதன்படி, பிணையங்களை விற்பனை செய்யும் பங்கேற்பாளர் லங்கா செகுயரிலுள்ள அவரது பிணையங்கள் கணக்கில் போதுமான தகுதியுடைய பிணையங்களையும் கொடுக்கல்வாங்கல்களுக்காக கொடுப்பனவு செய்வதற்கு வாங்கும் பங்கேற்பாளர் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையிலுள்ள அவரின் தீர்ப்பனவுக் கணக்கில் போதுமான நிதியத்தினையும் கொண்டிருக்குமிடத்து கொடுக்கல்வாங்கல்கள் முறைமையில் தீர்ப்பனவு செய்யப்படுகின்றன. இம்முறைமையில் தீர்ப்பனவு செய்யப்பட்ட அனைத்துப் பிணையங்களின் கொடுக்கல்வாங்கல்களும் மாற்றமுடியாதவையாகும்.

பத்திரங்களற்ற பிணையங்கள் வைப்பக முறைமை ஒரு தலைப்பு பதிவகமாகவும் அதேபோன்று அரச பிணையங்களுக்கான கட்டுக்காப்பாளராகவும் விளங்குகின்றது. பிணையங்களின் சொத்துடமையானது பத்திரங்களற்ற பிணையங்கள் வைப்பக முறைமையிலுள்ள நன்மைபெறும் மட்டத்தில் பதிவுசெய்யப்படுகிறது. பத்திரங்களற்ற பிணையங்கள் வைப்பக முறைமையிலுள்ள பத்திரங்களற்ற பிணையங்களின் உடமையாளர்கள் இணையத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட வசதியான லங்கா செகுயர் வலையமைப்பினூடாக எந்தவொரு நேரத்திலும் தமது முதலீடுகள் தொடர்பான நாளது வரையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சில்லறைக் கொடுப்பனவு முறைமைகள் 

காசோலை பிம்பப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பு

காசோலை, வங்கி வரைவுகள் மற்றும் அதேநேரமல்லாத நிதிய மாற்றல்கள் போன்ற சில்லறைக் கொடுப்பனவுகளின் தீர்ப்பனவிற்கு இலங்கை மத்திய வங்கி வசதிகளை வழங்குகின்றது. 2002இல் இலங்கை மத்திய வங்கி காசோலை தீர்ப்பனவு வசதிகளை வழங்குவதற்கு லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட்டிற்கு அதிகாரமளித்தது.

2006 மேயில், லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட் காசோலை பிம்பப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது. இது காசோலை பிம்பப்படுத்தலை இலத்திரனியல் ரீதியாக சமர்ப்பிப்பதற்கும் காசோலைகளைத் தீர்ப்பனவு செய்வதற்கும் வசதியளிக்கின்றது. காசோலை பிம்பப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பு முறைமையானது நாடு முழுவதும் என்ற ஒரே சீரான காசோலை தீர்ப்பனவு நேரத்தினை அறிமுகப்படுத்தியமையானது ரி+1 (ரி என்பது லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட் தீர்ப்பனவிற்காக காசோலையைப் பெற்ற நாளினையும் 1 என்பது அடுத்துவரும் வேலைநாளினையும் குறிக்கிறது) உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் காசோலையின் பெறுகைகளை அவர்களது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் அடுத்துவரும் வேலை நாளன்று வரவு வைப்பதனை இயலச்செய்தது. இம்முறைமையின் கீழ் மறுக்கப்பட்ட/ திருப்பப்பட்ட காசோலைகளுக்குப் பதிலாக காசோலை திருப்பல் பற்றிய அறிவித்தல் வழங்கப்படுகின்றன. காசோலை பிம்பப்படுத்தல் முறைமையின் கீழ் தேறிய தீர்ப்பனவு மீதிகள் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையில் ஒவ்வொரு வேலை நாளிலும் இரண்டு தடவைகள் தீர்ப்பனவு செய்யப்படுகின்றன.

காசோலை பிம்பப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பு முறைமைக்கு செய்யப்படுகின்ற தொழில்நுட்ப மேம்பாடுகள் ரி+1 தீர்ப்பனவிற்காக ஏற்றுக்கொள்ளப்படும் காசோலைகளுக்கான வெட்டு நேரத்தினை லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட் விரிவாக்குவதற்கும் உள்முகக் கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்படும் வெட்டு நேரத்தினை முன்கொண்டு செல்வதற்கும் இயலுமைப்படுத்தியதன் மூலம் காசோலை பிம்பப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பு முறைமையின் வினைத்திறன் உயர்வடைந்தது.

இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை

இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை 1993இல் அதேநேரமல்லாத சில்லறை நிதிய மாற்றல் முறைமையொன்றாக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டது. லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட் நிறுவப்பட்டதுடன் இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமைகளின் தொழிற்பாடுகள் 2002இல் லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட்டிடம் ஒப்படைக்கப்பட்டன. இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை முன்கூட்டியே அதிகாரமளிக்கப்பட்ட சிறிய பெறுமதிகளைக் கொண்ட தொகை வடிவிலான கொடுப்பனவுகளை (நேரடி செலவு மற்றும் வரவு மாற்றல்கள்) கையாண்டது. நாளொன்றிற்கு 2 தடவை செயன்முறைப்படுத்தலுடன் ரி+0 அடிப்படையில் கொடுக்கல்வாங்கல்களைத் தீர்ப்பனவு செய்வதனை வசதிப்படுத்துவதற்காக அதேநேரத்திலான வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமையானது மேம்படுத்தப்பட்ட பண்புகளுடனும் பாதுகாப்புடனும் 2010இல் தரமுயர்த்தப்பட்டது. விதத்தில் 2010இல் இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமையின் கொடுக்கல்வாங்கல்கள் பல்புடை தேறிய தீர்ப்பனவு அடிப்படையில் இலத்திரனியல் ரீதியாக தீர்ப்பனவு செய்யப்பட்டதுடன் இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமையின் கொடுக்கல்வாங்கல்களிலிருந்து தோன்றுகின்ற வங்கிகளுக்கிடையிலான தேறிய மீதிகள் ஒவ்வொரு வேலை நாளன்றும் இரண்டு சுற்றுக்களில் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையில் தீர்ப்பனவு செய்யப்படுகின்றன.

ஐக்கிய அமெரிக்க டொலர் காசோலை/ வரைவுத் தீர்ப்பனவு முறைமை

லங்கா கிளியர் பிரைவெற் லிமிடெட், இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளுடனான அவர்களது 'நொஸ்ர' கணக்குகள் மீதான காசோலைகள்ஃவரைவுகள் மற்றும் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளால் வாடிக்கையாளர் சார்பில் வழங்கப் பல காசோலைகள்/ வரைவுகள் ஆகிய இரண்டையும் தீர்ப்பனவு செய்வதற்கான ஐ.அ.டொலர் காசோலை/ வரைவுத் தீர்ப்பனவு முறைமையினையும் தொழிற்படுத்துகின்றது.

மரபுசார்ந்த ஐ.அ.டொலர்/ வரைவுத் தீர்ப்பனவு பொறிமுறையின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு வரவு வைப்பதற்கு மூன்று வாரங்களுக்கும் மேல் எடுத்தது. நீண்ட தீர்ப்பனவுச் செயன்முறையினைத் துரிதப்படுத்தும் பொருட்டு 2002இல் லங்கா கிளியர் பிரைவெற் லிமிடெட், ஐ.அ.டொலர் வரைவுத் தீர்ப்பனவு முறைமையினைத் தொடங்கியது. இதன் விளைவாக, ஐ.அ.டொலர் வரைவுகளைத் தீர்ப்பனவு செய்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம் மூன்று வாரங்களிலிருந்து மூன்று நாட்களாகக் (ரி+3) குறைக்கப்பட்டது. 

லங்கா கிளியர் பிரைவெற் லிமிடெட்டின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவைகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்தும் நோக்குடன் 2019 யூலையில் ஐ.அ.டொலர் வரைவு இணையம் ஊடான பிம்பம் மாற்றல் முறைமையினை அது தொடங்கியது. இவ் இணையம் ஊடான பிம்பம் மாற்றல் முறைமையானது வெப்தளம் அடிப்படையிலமைந்த இணையம் ஊடான தீர்ப்பனவு முறைமையொன்றாகத் தொழிற்படுவதுடன் தீர்ப்பனவிற்காக ஐ.அ.டொலர் காசோலைகள்ஃ வரைவுகள் பௌதீக ரீதியாகச் சமர்ப்பிக்க வேண்டிய தேவையினை இல்லாதொழிக்கின்றது. இணையம் ஊடான பிம்பம் மாற்றல் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் ஐ.அ.டொலர் காசோலைகளை/ வரைவுகள் தீர்ப்பனவு செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம், ரி+3 இலிருந்து ரி+1 ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கிகளுக்கிடையிலான ஐ.அ.டொலர் அதேநேர கணனி வழி கொடுப்பனவு முறைமை

இலங்கை வங்கிகளுக்கிடையிலான ஐ.அ.டொலர் அதேநேர கணனி வழி கொடுப்பனவு முறைமை என்பது வங்கிகளுக்கிடையிலான கணனி வழி அதேநேர ஐ.அ.டொலர் நிதிய மாற்றல் முறைமையொன்றாகும். இது லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட்டினூடாக டிஜிட்டல் முறைமையிலான கையொப்ப முறையில் வங்கிகளுக்கிடையிலான ஐ.அ.டொலர் கொடுப்பனவுகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது. லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட் ஆரம்பிக்கின்ற வங்கியிலிருந்து பெறுகின்ற வங்கி வரையிலான கொடுக்கல்வாங்கல்களை வழிப்படுத்துகின்றது. மேலும், லங்கா கிளியர், தீர்ப்பனவில் பங்கேற்கும் வங்கிகளின் கணக்குகளை இற்றைப்படுத்துவதற்கு தீர்ப்பனவுக் கோவையினை உருவாக்குகின்றது.

இலங்கை வங்கிகளுக்கிடையிலான ஐ.அ.டொலர் அதேநேர கணனி வழி கொடுப்பனவு முறைமை இலங்கையிலுள்ள ஏழு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் பங்கேற்புடன் 2015 யூலை 22இல் ஆரம்பமானது.

இலங்கை வங்கிகளுக்கிடையிலான ஐ.அ.டொலர் கொடுப்பனவு முறைமை வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கல்வாங்கலொன்றுக்கான குறைந்த செலவை வழங்குகின்றதுடன் கொடுக்கல்வாங்கல்களுக்காக எடுக்கும் நேரத்தினையும் சரியான நேரத்தில் இடம்பெறுவதனையும் மேம்படுத்துவதுடன் கொடுக்கல்வாங்கல்களின் தீர்ப்பனவின் வினைத்திறனையும் உயர்த்தியிருக்கிறது.

பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி

பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழியானது தேசிய கொடுப்பனவுகள் ஆணைக்குழுவின் விதந்துரைப்புக்களின் கீழ், இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதலுடன் லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படுகின்றது. இது பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி உறுப்பினர்களிடையேயான கணனி வழி அதேநேர நிதிய மாற்றல்கள்/ கொடுப்பனவுகளுக்கு உதவியளிப்பதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் நாளொன்றில் எந்தவொரு நேரத்திலும் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதனையும் தன்னியக்க கூற்றுப் பொறி, செல்லிடத் தொலைபேசி, இணையத்தளம் போன்றவற்றினூடாக வங்கியல்லா நேரங்களிலும் கூட கொடுப்பனவுகளை மேற்கொள்வதனையும் இயலச்செய்கிறது.

பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி கொடுப்பனவுகளுக்கான அதேநேர வங்கி மாற்றல்களை ஒரு விநாடிக்குள் மேற்கொள்ளவும் வாடிக்கையாளர்கள் 24x7 மற்றும் ஆண்டின் 365 நாட்களும் இலத்திரனியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் உதவியளிக்கின்றது. பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழிக் கொடுப்பனவுகள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கு அதேநேர அடிப்படையில் வரவு வைக்கப்பட்ட போதும், வங்கிகளுக்கிடையிலான தீர்ப்பனவுகள் ஒவ்வொரு வியாபார நாளும் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையில் இரண்டு சுற்றுக்களில் இடம்பெறுகின்றன.

கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகள்

2013ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகள் ஒழுங்குவிதி, கொடுப்பனவு அட்டைகள் பணி வழங்குவோரையும் இலங்கையில் செல்லிடக் கொடுப்பனவு முறைமையினையும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரங்களை மத்திய வங்கிக்கு வழங்குகின்றது. ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட உரிமத்தின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலொழிய எந்தவொரு ஆளும் கொடுப்பனவு அட்டைகளின் பணி வழங்குநராகவோ அல்லது செல்லிடக் கொடுப்பனவு முறைமைகளின் பணி வழங்குநராகவோ தொழில்களில் ஈடுபடவோ அல்லது தொழிற்படவோ முடியாது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி, அட்டை வழங்குநராகவும் நிதியியல் கையேற்பாளராகவும் தொழிற்படுவதற்கான உரிமங்களை நிறுவனங்களுக்கு வழங்குகின்றது. மேலும், வாடிக்கையாளர் கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட செல்லிடக் கொடுப்பனவு முறைமைகளின் தொழிற்பாட்டாளராகவும் செல்லிடத் தொலைபேசிகளை அடிப்படையாகக் கொண்ட இ-பண முறைமைகளின் தொழிற்பாட்டாளராகவும் தொழிற்படுவதற்கான உரிமங்கள் முறையே நிதியியல் நிறுவனங்களுக்கும் செல்லிடத் தொலைபேசி வலையமைப்புத் தொழிற்பாட்டாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. 

ஏனைய கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு உட்கட்டமைப்பு

பங்குரிமைமூலதன வர்த்தகப்படுத்தல் முறைமை மற்றும் படுகடன் பிணையங்கள் வர்த்தகப்படுத்தல் முறைமை

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இரண்டு கணனி வழி அதேநேர முறைமைகளை தொழிற்படுத்துகிறது. அதாவது பங்குரிமைமூலதனத்தின் (பங்குகள்) அதேநேர வர்த்தகப்படுத்தலுக்கான தன்னியக்கப்படுத்தப்பட்ட வர்த்தக முறைமை மற்றையது அரச பிணையங்கள் மற்றும் கம்பனி படுகடன் பிணையங்களின் நன்மை சார்ந்த அக்கறைகளை வர்த்தகப்படுத்துவதற்கான படுகடன் பிணையங்கள் வர்த்தகப்படுத்தல் முறைமை. பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமம் வழங்கப்பட்ட பங்குத்தரகர்கள் தன்னியக்கப்படுத்தப்பட்ட வர்த்தகப்படுத்தல் முறைமையிலும் படுகடன் பிணையங்கள் வர்த்தகப்படுத்தல் முறைமையிலும் நேரடி பங்கேற்பாளர்களாக செயலாற்றுகின்றனர்.

பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி

பொதுவான அட்டை மற்றும் கொடுப்பனவு ஆழியின் முதற்கட்டமான பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி தேசிய கொடுப்பனவு ஆணைக்குழுவின் விதந்துரைப்பின் கீழ், இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதலுடன் லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படுகின்றது. பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழியின் உறுப்பு வங்கிகளின் தன்னியக்கக் கூற்றுப் பொறி அட்டை/ பற்று அட்டை உடமையாளர்கள் பணத்தினை மீளப்பெறுவதற்கோ அல்லது கணக்கு நிலுவைகளை விசாரிப்பதற்கோ நாடு முழுவதிலுள்ள அத்தகைய வங்கிகளின் எந்தவொரு தன்னியக்கக் கூற்றுப் பொறிகளையும் பயன்படுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர். பொதுவான தன்னியக்கக் கூற்றுப்பொறி ஆழி உறுப்பினர்களின் தன்னியக்கக் கூற்றுப் பொறிகளிலிருந்து ஆழிப்படுத்தப்படும் கொடுக்கல்வாங்கல்களுக்கு வசதியளிப்பதற்காக உறுப்பு வங்கிகளின் தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழிகளுடன் பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி இணைக்கப்பட்டிருக்கிறது. பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி 2013 யூலை 23ஆம் நாளன்று நேரடித் தொழிற்பாடுகளை தொடங்கியது. பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழியின் தேறிய தீர்ப்பனவு நிலுவைகள் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையில் ஒவ்வொரு வியாபார நாளன்றும் இரண்டு சுற்றுக்களில் தீர்ப்பனவு செய்யப்படுகின்றன.

பகிரப்பட்ட தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி

பொதுவான அட்டை மற்றும் கொடுப்பனவு ஆழியின் மூன்றாவது கட்டமான பகிரப்பட்ட தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி தேசிய கொடுப்பனவுகள் ஆணைக்குழுவின் விதந்துரைப்புக்களின் கீழும் மத்திய வங்கியின் ஒப்புதலுடனும் லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படுகின்றது. பகிரப்பட்ட தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழியானது, ஒவ்வொரு உறுப்பினர் வங்கியும் அல்லது நிதியியல் நிறுவனமும் தனித்தனியாக தன்னியக்கக் கூற்றுப் பொறிகளைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் தேவையின்றி எந்தவொரு உறுப்பினர் வங்கிக்கும் தன்னியக்கக் கூற்றுப் பொறி கொடுக்கல்வாங்கல்களையும் முகாமைத்துவ முறைமை வசதிகளையும் வழங்கும் விதத்தில் விருத்தி செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்பான தகவல்

தொடர்பான சட்டங்கள்

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டம்

2005ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க கொடுப்பனவு தீர்ப்பனவு முறைமைச் சட்டம்

LankaSettle System Rules - Version 2.2

ஒழுங்குவிதிகள், பணிப்புரைகள் முறைமை விதிகள், வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகள்

கொடுப்பனவு செய்தித்திரட்டு