திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின்; பணிக்குழு அண்மைய பேரண்டப்பொருளாதார முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்கும், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தில் அதிகாரிகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்கும் யூன் 24 முதல் 30 வரையான காலப்பகுதியில் கொழும்புக்கு விஜயம் செய்தது. விஜயத்தின் இறுதியில், பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2026 யூன் 30 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
https://www.imf.org/en/news/articles/2026/06/30/pr26229-sri-lanka-imf-staff-concludes-visit
பணிக்குழு வருகையின் பின்னரான பத்திரிகை வெளியீடுகளானது நாடொன்றிற்கான விஜயமொன்றினைத் தொடர்ந்து பூர்வாங்கமாகக் கண்டறிந்தவைகளை தெரிவிக்கின்ற பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுக்களின் கூற்றுக்களை உள்ளடக்குகின்றன. இக்கூற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இப்பணிக்குழு நிறைவேற்றுச் சபை கலந்துரையாடலுக்கு வழிவகுக்கமாட்டாது.
•மத்திய கிழக்கு யுத்தத்திற்கு மத்தியில் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையானது பேரண்டப்பொருளாதார மற்றும் சமூக உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கு உதவியது. அவற்றின் பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அடையப்பட்ட முன்னேற்றங்கள் கொள்கைப் பதிலிறுப்பிற்கான இடவசதியினை ஏற்படுத்தியிருந்தது.
•இறை மற்றும் வெளிநாட்டுத் துறை உறுதிப்பாட்டைப் பாதுகாக்கும் அதேவேளை அதிர்வுகளிலிருந்து மீள்வதற்கும் தாக்குபிடிக்கும் தன்மையைக் கட்டியெழுப்புதல் மற்றும் உறுதியான, நீடித்துழைக்கும் மற்றும் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சியை அடைதல் போன்றவற்றை நோக்கிய முயற்சிகளை தொடர்வதற்கும்; சீர்திருத்த உத்வேகம் நீடித்துநிலைத்திருப்பது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
•பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடமைப்பொறுப்பினை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது வரவிருக்கும் இலையுதிர் காலத்தில் நடைபெறவுள்ள பன்னாட்டு நாணய நிதியப் பணிக்குழுவின் விஜயத்தில் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஏழாவது மீளாய்வின் பின்னணியில் முறையாக மதிப்பீடு செய்யப்படும்.
வொக்ஷிங்டன், டி சி: திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் குழு, அண்மைய பேரண்டப்பொருளாதார முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்கும், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தில் அதிகாரிகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்கும் யூன் 24 முதல் 30 வரையான காலப்பகுதியில் கொழும்புக்கு விஜயம் செய்தது. இவ்விஜயத்தின் நிறைவில், திரு. பப்பாஜீயோர்ஜியு பின்வரும் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
“மத்திய கிழக்கு யுத்தம் இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. 2026 பெப்புருவரியில் ஆண்டிற்கு ஆண்டு 1.6 சதவீதமாகவிருந்த முதன்மைப் பணவீக்கமானது வலு விலை அதிகரிப்புக்களைத் தொடர்ந்து மே மாதத்தில் 5.5 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. சுற்றாலாப் பயணிகளின் வருகையின் வளர்ச்சி மிதமடைந்ததோடு மொத்த பன்னாட்டு ஒதுக்குத் திரட்சி குறைவடைந்தது. இலங்கை மத்திய வங்கியானது 100 அடிப்படைப் புள்ளிக் கொள்கை வீத உயர்விற்கு பதிலளித்ததுடன் பேரண்டமுன்மதியுடைய வழிமுறைகளை மேற்கொண்டது. எரிபொருள், மின்சாரம், மற்றும் வளமாக்கிகளுக்கான உதவுதொகைகள் அதேபோன்று மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களுக்கான பணமாற்றல்கள் என்பவற்றை உள்ளடக்கிய தற்காலிக, வரவுசெலவுத் திட்டம் மீதான நிவாரணப் பொதியொன்றை அறிமுகப்படுத்தியது. நிச்சயமற்றதன்மைகள் உயர்ந்தளவில் காணப்படுகின்ற அதேவேளை உலகளாவிய பண்ட விலைகளின் அண்மைய வீழ்ச்சியானது வெளிநாட்டு அழுத்தங்களிலிருந்து ஓரளவுக்கு நிவாரணமளித்தது.
“இலங்கையின் மீட்சியை திடப்படுத்துவதற்கும் இறை மற்றும் வெளிநாட்டு உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை இடையறாது முன்னெடுத்துச் செல்வது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. 2026இல் ஏற்பட்ட இறைத் தளர்வைத் தொடர்ந்து, பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டைப் பாதுகாக்கும் பொருட்டு, ஆரம்ப மீதி 2027இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.3 சதவீதம் கொண்ட இலக்கை மீண்டும் எய்துவதற்கு அதிகாரிகள் உறுதிபூண்டுள்ளனர். செலவின நிலுவைகள் மீண்டும் உருவாகுவதைத் தடுத்தல் உள்ளடங்கலாக வரிசார்ந்த இணங்குவிப்பை மேம்படுத்தல், வரித் தளத்தை விரிவுபடுத்தல், மற்றும் அரசாங்க நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்தல் போன்றவற்றுக்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். புயலுக்குப் பிந்திய காத்திரமான மீட்சி மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்காக அனர்த்தத்துடன் தொடர்புடைய ஆதரவு உள்ளடங்கலாக செலவினங்களை நிறைவேற்றுவதிலுள்ள முட்டுக்கட்டைகளுக்குத் தீர்வுகாண்பது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. அரசுக்குச்சொந்தமான தொழில்முயற்சிகளின் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவதும் செலவு மீட்பு வலு விலையிடலைப் பேணுவதும் இறைசார் இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கு முக்கியமானவையாகும். அதேநேரத்தில், பாதிக்கப்படத்தக்க குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு போதுமான இலக்கிடலிற்கும் சமூகப் பாதுகாப்பு வலை உள்ளடக்கத்திற்கும் அதிகாரிகள் முன்னுரிமையளிக்க வேண்டும்.
“படுகடன் மறுசீரமைப்பு நிறைவுபெறுகின்ற அதேவேளை முன்மதியுடைய படுகடன் முகாமைத்துவ நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் உள்நாட்டுப் படுகடன் சந்தைகளை விரிவுப்படுத்துவதற்கும் பன்னாட்டு மூலதனச் சந்தைகளுக்கு இலங்கை திரும்புவதற்கு ஆதரவளிப்பதற்கும் பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் இயலளவைக் கட்டியெழுப்புவதை நோக்கிய முன்னேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
“தீவிரமடைந்துள்ள உலகளாவிய நிச்சயமற்றதன்மையின் கீழ் விலை உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கு நாணயக் கொள்கையானது காத்திரமானதாக, சுறுசுறுப்புமிக்கதாக மற்றும் தரவுகளைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஒதுக்குத் திரட்டலுக்குப் பாதிப்பின்றி, அதிர்வுகளின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் வெளிநாட்டுத் துறையின் சீராக்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு செலாவணி வீத நெகிழ்ச்சிதன்மை முக்கியமாக விளங்குகின்றது. அத்துடன், வெளிநாட்டுச் செலாவணித் தலையீடானது மிதமிஞ்சியத் தளம்பலைக் கையாள்வதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. சென்மதி நிலுவைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட வேண்டும். நிதியியல் உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கு தொழிற்பாட்டு இடர்நேர்வு, இணையப் பாதுகாப்பு மற்றும் பணம் தூயதாக்கலுக்கெதிராக/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல் என்பன அத்தியாவசியமாகும்.
“அதிர்வுகளுக்கான தாக்குபிடிக்கும் தன்மையைக் கட்டியெழுப்புதல், உறுதியான, நீடித்துழைக்கும் மற்றும் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சியினை எய்துதல் என்பன ஆளுகைச் சீர்திருத்தங்களை உறுதியாக நடைமுறைப்படுத்துவதை வேண்டுகின்றன. வரி முறைமையின் வினைத்திறனையும் நியாயத்தன்மையையும் மேம்படுத்துவதற்கும் வர்த்தகத்தைத் தாராளமயமாக்குவதற்கும் தொழிலாளர் சந்தையின் நெகிழ்வற்ற தன்மைகளுக்குத் தீர்வுகாண்பதற்கும் அத்துடன் முதலீடுகளை கவர்வதற்கான வியாபாரச் சூழலை மேம்படுத்துவதற்கும் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வறுமை வீதங்களைக் குறைப்பதற்கும் உறுதியானச் சீர்திருத்தங்களும் தேவைப்படுகின்றன.
“இலங்கையின் நிகழ்ச்சித்திட்டச் செயலாற்றமானது விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஏழாவது மீளாய்வின் பின்னணியில் முறையாக மதிப்பீடு செய்யப்படும். பணிக்குழுவின் திகதிகள் உரிய காலத்தில் அறிவிக்கப்படும்.
“பணிக்குழுவானது அதிமேதகு சனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க, கௌரவ பிரதம அமைச்சர் முனைவர். ஹரிணி அமரசூரிய, கௌரவ தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான பேராசிரியர். அனில் ஜயந்த பர்ணாந்து, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரிக்கான செயலாளர் முனைவர். ஹர்க்ஷன சூரியப்பெரும, சனாதிபதிக்கான மூத்தப் பொருளாதார ஆலோசகர் திரு. துமிந்த ஹூலங்கமுவ மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய சனாதிபதிக்கான முதன்மை ஆலோசகர் முனைவர். ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் ஏனைய மூத்த அரசாங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்கள் ஆகியோருடன் சந்திப்புக்களை நடாத்தியது. தனியார் துறைப் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள் போன்றோருடனும் இப்பணிக்குழு சந்திப்பினை மேற்கொண்டது.
“இவ்விஜயத்தின் போது மகத்தான ஈடுபாட்டினை வழங்கியமைக்கு அதிகாரிகளுக்கு நாம் நன்றி கூற விரும்புகின்றோம்.”








