உள்ளக மோசடியொன்று பற்றிய வெளிப்படுத்தலைத் தொடர்ந்து நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி தொடர்பான நிலைமைகளை நாளாந்த அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது.
நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி, இலங்கை மத்திய வங்கியுடனான ஆலோசனையுடன் இச்சம்பவம் பற்றி அனைத்தையுமுள்ளடக்கிய தடயவியல் கணக்காய்வொன்றினை நடாத்துவதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த நிபுணர்களுடன்கூடிய முன்னணி பன்னாட்டு நிறுவனமொன்றினை ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை இறுதிப்படுத்துகின்றது என்பதை இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்புகின்றது. இக்கணக்காய்வின் நோக்கெல்லையானது இம்மோசடியுடன் நேரடியாகத் தொடர்புடைய விடயங்களை ஆய்வதற்கு அப்பால் மோசடியான கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் கட்டுப்பாடு, மேற்பார்வை மற்றும் ஆளுகை மீதான இணங்குவித்தலில் இருந்த ஏதேனும் தவறுகைகள் பற்றி முழுமையாக மதிப்பிட்டுத் தீர்வுகாணுவதாகவும் இருக்கும். தடயவியல் கணக்காய்வு விரைவில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுவதுடன், இடைக்காலத்தில் எவையேனும் கண்டறியப்பட்டவைகள் அதேபோன்று இறுதி அறிக்கை என்பன உள்ளடங்கலாக அதன் முன்னேற்றம் பற்றி, கணக்காய்வுக் காலப்பகுதியில் அவசியமெனக் கருதப்படுமிடத்து கணக்காய்வாளர்களுடன் நேரடியாக ஈடுபாடு கொள்ளவுள்ள இலங்கை மத்திய வங்கிக்கு நேரடியாகச் சமர்ப்பிக்கப்படும்.
இதற்குச் சமாந்தரமாக, இனங்காணப்பட்ட குறைபாடுகளுக்குத் தீர்வுகாண்பதன் மீது கவனத்தைக் குவித்து அதன் உள்ளகக் கட்டுப்பாடுகளையும் ஆளுகைச் செயன்முறைகளையும் வலுப்படுத்துவதற்கு உடனடியானதும் விரைவானதுமான வழிமுறைகளை நடைமுறைக்கிடுமாறு இலங்கை மத்திய வங்கி நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சியைப் பணித்துள்ளது. அதன் கொள்கைகள், நடைமுறைகள், முறைமைகள் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றின் போதுமான தன்மையையும் செயல்திறனையும் மதிப்பிடுவதற்காக சுயாதீனமான மூன்றாம் தரப்பு மீளாய்வொன்றினைத் தொடங்குமாறும் நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி வேண்டப்பட்டுள்ளது.
நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சியானது மூலதனம் மற்றும் திரவத்தன்மை தொடர்பில் அனைத்து ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளைத் தொடர்ந்தும் பூர்த்திசெய்கின்றது. இலங்கை மத்திய வங்கியானது ந~னல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சியின் சபை, முகாமைத்துவம் என்பவற்றுடனும் அதேபோன்று தொடர்புடைய ஆர்வலர்களுடனும் நெருக்கமான அத்துடன் தொடர்ச்சியான ஈடுபாட்டினைப் பேணுவதுடன் வைப்பாளர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாப்ப்தற்கும் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினைப் உறுதிசெய்வதற்கும் தயார் நிலையில் உள்ளது. நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சியின் சம்பவத்திலிருந்து தோற்றம்பெறும் ஏதாவது இழப்பை எதிர்கொள்கின்ற ஏதேனும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் நிறுவனம் பற்றிய சான்றெதுவும் காணப்படவில்லை என்பதுடன் பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்படும் எதேனும் முரணான அறிக்கைகள் மூலம் தவறாக வழிநடாத்தப்பட வேண்டாம் எனவும் பொதுமக்கள் கோரப்படுகின்றனர்.








