கம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை
வர்த்தகப் பத்திரங்கள் சந்தை
வர்த்தகப் பத்திரங்களென்பது, தனியார் துறைக் கம்பனிகள் தமது சொந்தப் பயன்பாட்டிற்கு நிதிகளைத் திரட்டுவதற்காக வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் இடையேற்பாட்டாளர்களின் மூலம் வழங்குகின்ற குறுங்கால, பிணையமயப்படுத்தாத (பிணையிடப்படாத) படுகடன் பிணையங்களாகும். வர்த்தகப் பத்திரங்கள் பொதுவாக கொடுகடன் நம்பகத்தன்மை கொண்ட (உயர்தரமிடப்பட்டவை) நிறுவனங்களினால் பாரிய பெறுமதிகளைக் கொண்ட இனங்களில் வழங்கப்படுவதுடன் இவை கொடுப்பனவுக்கான மேலதிக வங்கி உத்தரவாதங்களையும் கொண்டிருக்கின்றன. வர்த்தகப் பத்திரங்கள் வழமையாக கழிவிடல் வீதங்களில் விற்பனை செய்யப்படுகின்ற போதும் சில வட்டியைக் கொண்டனவாகவும் இருக்கின்றன.
கம்பனி முறிச் சந்தை
கம்பனி முறிகள் என்பது தனியார் துறைக் கம்பனிகளின் நடுத்தர மற்றும் நீண்ட காலப் பிணைகளாகும். வழங்குநர் முதிர்ச்சியில் வட்டியையும் முதல் தொகையையும் செலுத்துவதற்கு கடப்பாடுடையவராவார். குறித்துரைக்கப்பட்ட சொத்தினால் உத்தரவாதப்படுத்தப்பட்டாத கம்பனி முறிகள் தொகுதிக் கடன்கள் என அழைக்கப்படுகின்றன.
கம்பனி தொகுதிக் கடன்கள்
தொகுதிக் கடன்கள் எனப்படுபவை தனியார் துறைக் கம்பனிகள், வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படும் பிணையிடப்படாத, நடுத்தர மற்றும் நீண்ட கால, வட்டி உழைக்கும் முறிகளாகும். இவை வழங்குநரின் பொதுவான கொடுகடனின் மூலம் மாத்திரமே உத்தரவாதப்படுத்தப்படுகின்றன. தொகுதிக் கடன்கள் பொதுவாக பெரிய, நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களினாலேயே வழங்கப்படுகின்றன. தொகுதிக் கடன்களின் உடமையாளர்கள் கடன் வழங்கியோராகக் கருதப்படுவதுடன் வழங்கிய கம்பனி ஒடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் பங்குடமையாளர்களுக்கு முன்னர் கொடுப்பனவுகளைப் பெற உரித்துடையவராவர்.