உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை
உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை இரண்டு விடயங்களைக் கொண்டதாகும்.
1. சேவை நாடுநர் அல்லது சில்லறைச் சந்தை
இது தனிப்பட்டவர் அல்லது நிறுவன ரீதியான வாடிக்கையாளருடன் தொடர்பான கொடுக்கல்வாங்கல்களை உள்ளடக்குகிறது.
2. வங்கிகளுக்கிடையிலான அல்லது மொத்த விற்பனைச் சந்தை
இது முக்கியமாக வெளிநாட்டுச் செலாவணியிலுள்ள அதிகாரம் பெற்ற வணிகர்களிடையே ஒழுங்கமைக்கப்பட்டதொன்றாகும். இது அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் உள்ளடக்குகிறது. இச்சந்தையானது, நாணய மாற்று ஊடாக வங்கித்தொழில் முறைமைக்குள் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையினை முகாமைப்படுத்துவதற்கு உதவுகிறது.
வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் இரண்டு முக்கிய தொழிற்பாடுகள் காணப்படுகின்றன
(i) ஒரு நாட்டின் நாணயத்தினை மற்றொரு நாட்டின் நாணயத்திற்கு மாற்றுதல்.
(ii) செலாவணி வீதத்தில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து தோன்றுகின்ற இடர்நேர்வுகளை பல்வேறுபட்ட பெறுதிச் சாதனங்களினூடாகக் குறைப்பதற்கு உதவுதல்.
வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் மேற்குறிப்பிட்ட பண்புகள் பின்வருவனவற்றிற்கு வசதியளிக்கின்றன
(i) இறக்குமதிகளுக்கு நிதியிடுதல்
(ii) ஏற்றுமதிப் பெறுகைகளை மாற்றுதல்
(iii) ஏனைய வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல்கள்
வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்படும் முக்கிய இடர்நேர்வுகள்
முக்கியமான இடர்நேர்வு யாதெனில் செலாவணி வீதத்தில் காணப்படும் தளம்பலாகும். அதாவது நாணயமொன்று மற்றைய நாணயமொன்றிற்கு மாற்றப்படுகின்ற வீதத்தில் ஏற்படும் நியாயமற்ற தளம்பல்களாகும். தளம்பல் மிகையானதாக இருக்குமிடத்து இது வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் உறுதிப்பாடின்மையினைத் தோற்றுவிக்கும். அதன் மூலம் தனிப்பட்ட நிறுவனங்களின் வெளிநாட்டுச் செலாவணிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் பெறுமதி பாதிக்கப்படும். பரஸ்பர பரிமாற்றல்கள், தேர்வுகள் மற்றும் முன்னோக்கிய ஒப்பந்தங்கள் போன்ற வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் கிடைக்கத்தக்க பெறுதிச் சாதனங்கள் செலாவணி வீதத்தின் தளம்பல்களின் இடர்நேர்வுகளைக் குறைக்க உதவும்.
வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் கொடுக்கல்வாங்கல்கள் பின்வருவனவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
(i) காசு அடிப்படையில்
காசு அடிப்படை என்பது அதே நாளன்று வெளிநாட்டு நாணயத்தின் கொள்வனவுகள்/ விற்பனைகளை உடனடியாக விநியோகித்தல் (காசு அடிப்படையில்)
(ii) நாளைய அடிப்படையில்
அடுத்த வியாபார நாளன்று (நாளைய அடிப்படை) அல்லது
(iii) உடன் அடிப்படையில்
இரண்டு வியாபார நாட்களுக்குள் (உடன் அடிப்படையில்)
(iv) முன்னோக்கிய அடிப்படையில்
முன்னோக்கிய அடிப்படை என்பது தற்பொழுது குறித்துரைக்கப்பட்ட விலையொன்றில் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு/ விற்பனை செய்து இரண்டு வியாபார நாட்களுக்குக் கூடிய எதிர்காலத் திகதியொன்றில் கொடுத்துத் தீர்ப்பனவு செய்யும் முறையாகும்.
2001ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மிதக்கும் செலாவணி வீதமுறைமையைக் கொண்டிருப்பதுடன் இது கேள்வி மற்றும் நிரம்பல் ஆகிய சந்தை விசைகளிற்கிணங்க செலாவணி வீதத்தில் சுயாதீனமாக சீராக்கங்களைச் செய்ய அனுமதிக்கிறது. எனினும், செலாவணி வீதங்களில் ஏற்படும் மிகையான தளம்பல்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சந்தையில் தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான உயர்ந்தபட்ச தேறிய ஆரம்ப நிலைமையின் வரையறையினை விபரிப்பதுடன் சந்தையின் ஒழுங்கான தொழிற்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் நடவடிக்கைகளையும் நெருக்கமாகக் கண்காணிக்கின்றது.